4709. வாழ்வேன்அரு ளார்அமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான்
ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன்
சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித்
தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே.
உரை: இவ்வுலகில் வாழ்பவனாகிய யான் திருவருளாகிய அமுதத்தையுண்டு வாழ்கின்றேனாயினும் எழுவகை வேதனைகளினின்றும் நீங்கி விட்டேன்; இனித் திருச்சிற்றம்பலத்தைச் சுற்றி வலம் வந்து துதித்தும் வாழ்த்தியும் வணங்குவேனே யன்றி வேறு யாவர்க்கும் சிறிதும் தலைதாழ்த்தி வணங்க மாட்டேன். எ.று.
அருளார் அமுது - திருவருள் ஞானமாகிய அமுதம். ஏழ் வேதனை - எழுவகைப் பிறவிகளிலும் தோன்றும் துன்பங்கள். பிறப்புத் தோறும் எழுவகை வேதனைகள் உண்டெனப்படுவதால், “ஏழ் வேதனை” என இசைக்கின்றார். ஆன்மப் பிரகாசத்தை மறைக்கும் எழுவகை மாயா சத்திகளால் உண்டாகும் வேதனை என உரைப்பினும் அமையும்; இவை ஏழ் திரைகளாகவும் காட்டப்படுகின்றன. (உபதேசப் பகுதி). சூழ்தல் - சுற்றி வருதல். திருவருட் பேற்றால் உளதாகும் இறுமாப்பினால், “இனி யார்க்கும் தாழ்ந்திடேனே” என வுரைக்கின்றார். “சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச் சென்றங் கிறுமாந்திருப்பன் கொலோ” எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. (4)
|