4710. தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின்
கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான்
ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.
உரை: தாமதிக்காமல் என்னை ஆண்டு கொண்ட தந்தையாகிய சிவனே! நின்னுடைய நிறம் பொருந்திய மணிகள் இழைத்த சிற்றம் பலத்தை யடைந்து உன்னைப் போற்றி வழிபடும் பேறு பெற்றேன்; நிலை ஏழனுள் ஏழாம் நிலைக்கு மேலுள்ள சிவ சந்நிதி சேர்ந்து விளங்குகின்றேன்; அதனால் ஊழ்வினையால் உண்டாகும் துன்பங்கள் யாவும் என்னை விட்டு நீங்கி மொழிந்தன. எ.று.
ஏழாம் நிலை - மாயா சத்தி நிலை (கறுப்புத் திரை), கிரியா சத்தி (நீலத்திரை), பராசத்தி நிலை (பச்சைத் திரை), இச்சா சத்தி நிலை (சிவப்புத் திரை), ஞான சத்தி நிலை (பொன்மைத் திரை), ஆதி சத்தி நிலை (வெண்மைத் திரை), சிற்சத்தி நிலை (கலப்புத் திரை). சிற்சத்தி நிலைக்குமேல் உள்ளது சிவமாதலின் அதனை யடைந்து சிவமாயின சிறப்பை, “ஏழாம் நிலை மேல் ஏறி இலங்குகின்றேன்” என வுரைக்கின்றார். ஊழ் - ஊழ்வினை. சிவத்தைச் சார்ந்து சிவமாகிய வழி, ஊழ்வினைக்குப் பற்றுக்கோடு இல்லாமையால் கெடுவது பற்றி, “ஊழால் வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே” எனக் கூறுகின்றார். துன்பங்கள் ஒவ்வொன்றாகக் கெடுவது தோன்ற, “ஒழிந்ததன்றே” என்று ஒருமை வினை தந்துள்ளார். (5)
|