4711.

          கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
          சூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன்
          பாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும்
          வாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே.

உரை:

     முறை பிறழாது வேதங்களும் ஆகமங்களும் புகழ்ந்தோதுகின்ற சூடாமணியும், மணியின்கண் விளங்கும் சோதியுமான சிவனே! என்பால் உள்ள குற்றங்களைப் போக்கித் திருவருளை நல்கி நின்னுடைய திருவடியென்னும் வாடாத தாமரை மலரை என் தலையில் சூட்டினாய்; ஆகவே நீ வாழ்க. எ.று.

     முன்னுக்குப்பின் முறை பிறழாமை தோன்ற, “கோடா மறை ஆகமங்கள்” என்றும், அவற்றால் முதற்பொருளாகச் சிறப்பித் துரைக்கப்படுதலின், “கூறுகின்ற சூடாமணியே” என்றும் எடுத்தியம்புகின்றார். சூடாமணி - யாராலும் சூடப்படாத தெய்வமணி. என்பாடு ஆனவை - என்பால் உண்டாயின குற்றங்கள். வாடா மலர் - வாடாத மலர். மலர் - தாமரைப் பூ.

     (6)