4712.

          எல்லாஞ்செய வல்லவ னேஎனை ஈன்றதாயின்
          நல்லாய்சிவ ஞானிகள் பெற்றமெய்ஞ் ஞானவாழ்வே
          கொல்லாநெறி காட்டிஎன் தன்னைக் குறிப்பிற்கொண்டென்
          பொல்லாமை பொறுத்தனை வாழ்கநின் பொற்பதமே.

உரை:

     எல்லாவற்றையும் எளிதிற் செய்ய வல்ல பெருமானே! என்னைப் பெற்ற தாயினும் நல்லவனே! சிவஞானிகள் பெற்று மகிழும் உண்மை ஞான வாழ்வுக்குக் காரண முதல்வனே! கொல்லாமையாகிய நன்னெறியை யான் உணர்வித்துக் குறிப்பாக என்னை ஆட்கொண்டு என்னுடைய தீமைகள் எல்லாவற்றையும் பொறுத்தருளினாயாகலின், நினது அழகிய திருவடி பல்லாண்டு வாழ்க. எ.று.

     வரம்பில் ஆற்றலுடையவனாதலால், “எல்லாம் செயவல்லவனே” என்றும், தாயிற் சிறந்த தயாவான தத்துவ னென்பது பற்றி, “எனை ஈன்ற தாயின் நல்லவனே” என்றும் கூறுகின்றார். சிவஞானிகள் மெய்யின்ப வாழ்வு பெற அதனை நல்கும் முதல்வனாதலால், “சிவ ஞானிகள் பெற்ற மெய்ஞ்ஞான வாழ்வே” என மொழிகின்றார். வாழ்வு தருபவனை, வாழ்வு என்பது உபசாரம். கொல்லா நெறி - உயிர்களைக் கொல்லாமையாகிய அறநெறி. குறிப்பு - ஈண்டுச் சிறப்பின் மேற்று. பொன் - அழகு.

     (7)