4713. பரமான சிதம்பர ஞான சபாபதியே
வரமான எல்லாம் எனக்கீந்தநல் வள்ளலேஎன்
தரமானது சற்றும் குறித்திலை சாமிநின்னை
உரமானஉள் அன்பர்கள் ஏசுவர் உண்மைஈதே.
உரை: மேன்மையுடைய சிதம்பரத்தில் உள்ள ஞான சபைக்குத் தலைவனே! மேலான வரங்கள் யாவையும் எனக்குத் தந்தருளிய நல்ல வள்ளலே! என் தகுதிப்பாட்டைச் சிறிதும் திருவுள்ளத்திற் கொள்ளாமையால், சாமியாகிய நின்னைத் திடமுடைய உன் அன்பர்கள் தாம் நோக்காதவன் என்று இகழ்வர்; யான் சொல்லும் இது உண்மை. எ.று.
பரம் - மேன்மை. ஞான சபைக்குத் தலைவனாதலால், “ஞான சபாபதியே” என்று புகழ்கின்றார். நல்வள்ளல் - அரிய பொருள்களையும் வரையாது வழங்குபவன். என் தரம் - எனது தகுதி. குறைந்த அன்புடைமையால் தகுதி குன்றினவன் என்றற்கு, “என் தரமானது சற்றும் குறித்திலை” என்கின்றார். சாமி - தலைவன். “சீவக சாமி என்பான்” (சீவக) என்பது போல. மெய்ம்மையால் திண்ணிய அன்பர்களை, “உரமான அன்பர்கள்” என வுரைக்கின்றார். ஏசுதல் - ஈண்டுக் குறை கூறுதல் என்னும் பொருளில் வந்தது. தமது கூற்றை வலியுறுத்தற்கு “உண்மை யீதே” என்று மொழிகின்றார். (8)
|