4714. தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந்
நாயேன்பிழை யாவையும் கொண்டனை நன்மைஎன்றே
காயேகனி யாகக் கருதும் கருத்தனேநின்
சேயேஎன என்பெயர் எங்கும் சிறந்ததன்றே.
உரை: எனக்குத் தாயும் என்னைப் பெற்ற தயாநிதியாகிய தந்தையுமானவனே! இந்த நாய் போன்றவனாகிய என் குற்றங்கள் யாவற்றையும் நல்லன என்று ஏற்றுக்கொண்டாய்; துவர்க்கின்ற காயைத் தந்தாலும் இனிய கனியென எண்ணி ஏற்றருளும் கருத்துருவானவனே! நின்னுடைய பிள்ளையென்றே என் பெயர் நாடெங்கும் பரந்துளது, காண். எ.று.
தயாநிதி - தயாவையே செல்வமாக உடையவன். தயா - தயவு எனவும் வழங்கும். நாய் போல் இழிந்தவன் என்பாராய், “இந்நாயேன்” எனக் கூறுகின்றார். நன்மை விளைவிப்பது பற்றி நல்லவற்றை “நன்மை” யென நவில்கின்றார். கருத்தன் - கருத்தே யுருவாக அமைந்தவன்; தலைவன் என்றுமாம். சேய் - பிள்ளை. வடலூர் வள்ளற் பெருமானை, இராமலிங்கம் பிள்ளை என வுரைப்பராயினும், அது இராமலிங்கத்துக்குப் பிள்ளையெனவும் பொருள் படுவது கொண்டு, “சேயே என என் பெயர் சிறந்ததன்றே” என்று செப்புகின்றார். அன்றே - அசை நிலை. (9)
|