4719. தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே
சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்
செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்
தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே
இப்படி வான்முதல் எங்கணும் அறிய
என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
உரை: என்னைப் பள்ளி யெழுப்பி மெய்யான இன்பம் தந்தீராதலால் உலகத்தவர் போலத் தப்பாக எடுத்துக்கொண்டு பேசமாட்டேன்; நான் சத்தியத்தையே சொல்லுகின்றேன்; சால வித்தைகளைச் செய்யும் சித்தர்களில் ஒருவர் என்று சொல்லப்படும் தேவருடைய திருச்சமுகத்தில் இப்பூமியும் வானுலகமும் முதலாகவுள்ள எவ்வுலகத்திலும் யாரும் அறிய என் உடல் முதலிய மூன்றையும் உமக்கே உரியனவாகக் தந்தொழிந்தேன்; இனி அவற்றை எப்படியாகினும் செய்து கொள்வாராக. எ.று.
தப்படி - தவறாக உணர்தல். சாற்றுதல் - இங்கே பேசுதற் பொருளில் வந்தது. செப்படி வித்தை - மாயம் பொருந்திய சால வித்தைகள். வல்லபத் திருச்சமுகம் - வல்லமை பொருந்திய உயர்ந்த சமுகம். படி - பூமி. என் உடல் முதலிய மூன்றையும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றற்கு, “எப்படியாயினும் செய்து கொள்கிற்பீர்” என்று மொழிகின்றார். (4)
|