4720. தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்
தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்
கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே
கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்
வருணப் பொதுவிலும் மாசமு கத்தென்
வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்
இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
உரை: என்னைப் பள்ளியினின்றும் எழுப்பி மெய்யான அருள் ஞான இன்பம் தந்தீராதலால் சமயத்துக்கு ஏற்றவாறு சொல்லி பிறகு அதனை மாற்றுகின்ற தவறான உரை இதுவன்று; நான் சொல்லுவது சத்தியம்; கேட்டருள்க; கருணை மிகுதியால் என்பாற் போந்து என் உள்ளே கலந்து கனவிலும் நனவிலும் மகிழ்ச்சி தருகின்றீர்; அதனால் உயர்ந்த சிற்றம்பலமாகிய உமது பெரிய சமுகத்தில் என்னுடைய வளவிய பொருள், உடல், உயிர் ஆகிய மூன்றையும் அஞ்ஞான இருளாகிய நஞ்சினைப் போக்கி ஞானமாகிய அமுதத்தைத் தரவல்லவராதலின் உண்மை யன்புடன் கொடுக்கின்றேன். எ.று.
தருணம் - சமயம். கருணை மிகுதியைக் “கருணைப் பெருக்கு” என்கின்றார். களிப்பு - மகிழ்ச்சி. உயர்வுடைய சிற்றம்பலம் என்றற்கு, “வருணப் பொது” என்று சிறப்பிக்கின்றார். நண்பு - உண்மை யன்பு. அஞ்ஞானத்தைச் செய்யும் உலகியல் மாயையை இருள் என்றும், அதனால் தீமையே விளைதலால் நஞ்சு என்றும் கூறுகின்றார். நஞ்சு - நச்சு என வந்தது. (5)
|