4721.

     வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன்
          மனம்ஒத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும்
     தாய்மட்டில் அன்றிஎன் தந்தையும் குருவும்
          சாமியும் ஆகிய தனிப்பெரும் தகையீர்
     ஆய்மட்டில் என்னுடல் ஆதியை நுமக்கே
          அன்புடன் கொடுத்தனன் ஆண்டவ ரேநீர்
     ஏய்மட்டில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
          எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.

உரை:

     தாயாதலே யன்றி எனக்குத் தந்தையும் குருவும் தலைவனுமாகிய ஒப்பற்ற பெருந்தகையாகிய நீவிர், என்னைப் பள்ளி எழுப்பி மெய்யின்பம் தந்தீராதலால் என் உடல் முதலிய மூன்றையும் உமக்கே கொடுத்து விட்டேன்; நான் சொல்லுகின்ற இது வாயளவில் சொல்லுவதன்று; என் மனமாரச் சொல்லுகிற உண்மை உரையாகும்; இது முக்காலும் உண்மை; இனி என்னை ஆண்டவராகிய நீர் உமக்கு இயைத்த வகையில் எப்படியேனும் செய்து கொள்வீராக. எ.று.

     வாய் மட்டும் சொல்லுகின்ற வார்த்தை - மனநினைவு வேறாக வாயளவில் பேசுகின்ற சொல். சாமி - தலைவன். ஆன மட்டில் என்பது ஆய்மட்டில் என வந்தது. எயித்தவாறு என்பது எதுகை நோக்கி ஏய்மட்டில் என வந்தது. ஏய்தல் - இயைதல்.

     (6)