4722. தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும்
திருட்டுப்பேச் சன்றுநும் திருவுளம் அறியும்
எத்திக்கும் அறியஎன் உடல்பொருள் ஆவி
என்பவை மூன்றும்உள் அன்பொடு கொடுத்தேன்
சித்திக்கும் மூலத்தைத் தெளிவித்தென் உள்ளே
திருநடம் செய்கின்ற தேவரீர் தாமே
இத்திக்கில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
உரை: என்னைப் பள்ளியெழுப்பி மெய்யின்பம் தந்தீராதலால், எல்லாத் திசைகளிலும் உள்ள நன்மக்களெல்லாரும் அறியும்படி என்னுடைய உடல் பொருள் ஆவி மூன்றையும் அன்புடன் கொடுத்து விட்டேன்; செவி யினிக்கப் பேசி வெறுப்பை உள்ளத்திற்கொண்டு பேசும் திருட்டுப் பேச்சன்று நான் சொல்வது; எல்லாம் நின்னுடைய திருவுள்ளம் அறியும்; பயன் விளைக்கும் மூலப் பொருளை எனக்குத் தெளியச் சொல்லி எனது உள்ளத்தின்கண் திருநடனம் புரியும் தேவராகிய நீவிர் இங்கே எப்படியேனும் செய்து கொள்வீராக. எ.று.
உள்ளன்போடு உண்மையே யுரைக்கின்றேன் தேவரீர் நன்கறிவீர் என்பாராய், “நும் திருவுளம் அறியும்” என வுரைக்கின்றார். “எத்திக்கும் அறிய” என்றவிடத்து, திக்கு - நான்கு திசைகளிலும் வாழும் நன்மக்களைக் குறித்து நின்றது; உண்மையை உள்ளவா றறிபவர் நன்மக்கள் என அறிக. திருவருள் ஞானம் எல்லா நலங்களையும் விளைவிப்பதாகலின், அதனைச் “சித்திக்கும் மூலம்” என உரைக்கின்றார். மயக்கமின்றி உணரும் பொருட்டுத் “தெளிவித்து” எனக் கூறுகின்றார். இத்திக்கு என்பது இவ்விடம் என்று பொருள்பட வந்தது. (7)
|