4723. புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்
புகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட
சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச்
சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்
தன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே
தந்தனன் திருவருட் சந்நிதி முன்னே
என்மார்க்கத் தெப்படி யேனுஞ்செய் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
உரை: என்னைப் பள்ளி யெழுப்பி மெய்யின்பம் தந்தீராதலால், நும்முடைய அழகிய திருவடிகளைத் தரிசித்த சன்மார்க்கத்துத் துறவுச் செல்வர்கள் முன்னின்று சத்தியமாகச் சொல்லுகின்றேன்; எனது நெறியில் ஒழுகுகின்ற என்னுடைய உடல் பொருள் ஆவி மூன்றையும் அருளொளி நிலவும் உமது திருமுன்பு நுமக்கே தந்து விட்டேன்; ஆகவே, நீவிர் அவற்றை என்ன வழியில் எப்படியேனும் செய்து கொள்வீராக! நான் சொல்லும் இது பொய்ந்நெறியில் மனத்திலொன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் பொய்யுரையன்று. எ.று.
புன்மார்க்கம் - பொய் பேசித் திரியும் பொய்ந்நெறி. சாதுக்கள் - துறவு பூண்டொழுகும் ஞானச் செல்வர்கள். சத்தியம் சத்தியம் என நின்ற அடுக்கு, முக்காலும் உண்மையெனப் பொருள்படும் வன்புறை குறித்தது. என்றன் மார்க்கம் என்றற்குத் “தன் மார்க்கம்” எனக் கூறுகிறார். இறைவன் திருச்சமுகம் திருவருள் ஞான வொளி திகழும் சிறப்புடையதாகலின், “திருவருட் சந்நிதி” என்று புகழ்கின்றார். (8)
|