4724.

     இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம்
          என்னுள் அமர்ந்தறிந் தேஇருக் கின்றீர்
     விச்சை எலாம்வல்ல நுந்திருச் சமுக
          விண்ணப்பம் என்னுடல் ஆதியை நுமக்கே
     நிச்சலும் தந்தனன் என்வசம் இன்றி
          நின்றனன் என்றனை நீர்செய்வ தெல்லாம்
     எச்செயல் ஆயினும் செய்துகொள் கிற்பீர்
          எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.

உரை:

     என்னைப் பள்ளி யெழுப்பி மெய்ஞ்ஞான வின்பம் தந்தீராதலால், வித்தைகள் யாவும் வல்லவராகிய உமது திருச்சமுகத்தில் செய்துகொள்ளும் விண்ணப்பமாவது; என்னுடைய உடல் பொருள் ஆவி மூன்றையும் நித்தமாகத் தந்து விட்டேன்; என் தன்மை யென்பதின்றி நின் வசமாக நிற்கின்றேன். ஆகவே, நீவிர் செய்வது எச்செயலாயினும் அவ்வண்ணமே செய்து கொள்வீராக; எனக்கென விருப்பம் வேறில்லை; என்னுடைய உள்ளக் கருத்துக்கள் எல்லாவற்றையும் என் உள்ளத்தில் எழுந்தருளியிருந்து நீவிர் நன்கு அறிந்திருக்கின்றீர், காண். எ.று.

     அமர்தல் - விரும்பியிருத்தல். வித்தை விச்சையென வந்தது. நிச்சல் - நித்தம். இங்கே நிச்சயம் என்ற பொருளில் வந்தது. என் வசம்-சீவனாகிய என்னுடைய தன்மை; ஆன்ம போதம் எனக் கொள்ளினும் பொருந்தும்.

     (9)