4725.

     மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
          வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
     முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
          மூவகை யாம்உடல் ஆதியை நுமது
     பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
          பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
     என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
          எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.

உரை:

     நிலைபெற்ற சன்மார்க்கத்தால் இவ்வுலகில் வானுலகத்து அமரர்கள் பெற்ற சாவா மருந்தாகிய அமுதத்தைப் பெற்றது போல நான் திருவருள் ஞானாமிர்தத்தைப் பெற்றுக் கொண்டேன்; முப்பிறவியில் தவம் செய்து பெற்றதும் இவ்வாறேயாம்; என்னைப் பள்ளி யெழுப்பி மெய்யின்பம் தந்தீராதலால் மூன்றாகிய உடல் பொருள் ஆவிகளை உம்முடைய பொன்னம்பலத்தில் ஆடுகின்ற அழகிய திருவடிகளையுடைய நீவிர் காணச் சமர்ப்பித்து விட்டேன்; இனி அவற்றை என்ன செய்துகொண்டாலும் செய்துகொள்வீராக. எ.று.

     மன் - நிலைபேறு. வான் - ஆகுபெயரால் வானுலகத்து அமரர்கள் மேலதாயிற்று. தவமும் முன்னைத் தவமுடையவர்க்கே யாவது போல் நான் பெற்ற திருவருட் பேறு முன்னைப் பிறப்பிற் செய்த தவப்பயன் என்றற்கு, “முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர்” என்று மொழிகின்றார். உண்மை யன்பு பொருந்திய மனம் உவந்து கொடுக்கின்றேன் என்பாராய், “பொருந்திக் கொடுத்தேன்” எனக் கூறுகின்றார்.

     (10)