4726.

     தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
          சேர்கதி பலபல செப்புகின் றாரும்
     பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
          பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
     மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
          மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
     எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
          எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.

உரை:

     பலவாகிய தெய்வங்களை நினைந்து வழிபடுவோரும், இறந்த உயிர் பெறும் கதிகள் இவை என்று உரைப்போரும் பொய் நிறைந்த கலை வகைகளைப் பலவாக எடுத்தோதுவோரும், பொய்ச் சமயங்களைப் பாராட்டுவோரும் உண்மையான திருவருள் விளக்கம் சிறிதுமின்றிப் பின்னர் விளைவது அறியாமல் வீணே காலம் கழிக்கின்றனர்; என்னைப் பள்ளி யெழுப்பி மெய்யின்பம் தந்தீராதலால், தளர்வு பயக்கும் துன்பத்துக் கேதுவாகிய அறியாமையைப் போக்கி நல்லறிவை வழங்கி யருள்வீராக. எ.று.

     சிறு தெய்வங்கள் பலவாதலின் அவற்றை நினைந்து வழிபடுவோரும் பலராதல் கண்டு வருந்துகின்றாராதலால் வடலூர் வள்ளற் பெருமான், “தெய்வங்கள் பலபல சிந்தை செய்வார்” என்று தெரிவிக்கின்றார். இறந்த வுயிர்கள் மறுமையில் இன்ன வின்ன பிறப்புக்களை எடுக்கும் எனப் புராணங்கள் கூறுதலால், “சேர் கதி பலபல செப்புகின்றார்” எனப் புராணிகர்களைக் குறித்தோதுகின்றார். நிலைத்துப் பயன் தரும் கலைகளை விடுத்து பொய் புனைந்துரைக்கும் கலைஞர்களையும், வேறு வேறு சமயங்களைப் பொய்யாகப் படைத்து மக்களினம் ஒருமைப் படாதவாறு தீது செய்பவர்களையும், “பொய்ச் சமயாதியை மெச்சுகின்றார்” என்று புகல்கின்றார். இவர்கள் இவ்வாறு ஒழுகுதற்குக் காரணம் உண்மை யறிவில்லாமை எனத் தெளிகின்றாராதலின், “மெய் வந்த திருவருள் விளக்க மொன்றில்லார்” எனவும், தமது செயல்களால் விளையும் பயனை எண்ணாமலும் காலத்தின் அருமையை நோக்காமலும் கெடுக்கின்றார்கள் என்பாராய், “மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்” என இயம்புகின்றார். இவர்கள் யாவரும் உண்மை யறிவு கொண்டு விளங்குதல் நலம் என நினைந்து, இறைவனே இவர்கட்கு அறியாமையை நீக்கி நல்லறிவு தருக என வேண்டுகின்றமை புலப்பட, “எய்வந்த துன்பொழித்து அவர்க்கு அறிவருள்வீர்” என இறைஞ்சுகின்றார். தளர்வையும் துன்பத்தையும் உண்டாக்குதலால் அறியாமையை, “எய்வந்த துன்பு” என்று சொல்லுகின்றார். துன்பம் - துன்பு என வந்தது.

     (11)