4728.

     மதத்திலே சமய வழக்கிலே மாயை
          மருட்டிலே இருட்டிலே மறவாக்
     கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
          கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
     பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
          பரிந்தெனை அழிவிலா நல்ல
     பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
          பண்ணிய தவம்பலித் ததுவே.

உரை:

     மதக் கொள்கைகளும் தத்துவங்களும் நிறைந்த சமய நெறிகளிலும், உலகியல் மாயையாகிய மருட்சி கொண்ட அஞ்ஞான இருளிலும், நீங்காத கோபத்திலும் மனத்தை ஈடுபடுத்தி வீணே பலர் பொழுது போக்குகின்றார்கள்; நானோ உன்னுடைய பூப்போன்ற திருவடிகளிலே மனத்தைப் பொருத்தி யுள்ளேன்; நீயும் என்பால் அன்பு கொண்டு அழிவில்லாத நல்ல நிலையிலே என்னை வைத்துள்ளாய்; எனக்கு இது போதும்! நான் செய்த தவம் எனக்குப் பயன் தந்து விட்டது. எ.று.

     சமயங்கள் தோறும் பலவகைக் கொள்கைகளும் தத்துவ வழக்கங்களும் நிறைந்துள்ளனவாதலால், மதத்தையும் சமய வழக்கையும் எடுத்தோதுகின்றார். மாயை மயக்கத்தை “மருட்டு” எனவும், அஞ்ஞானத்தை “இருட்டு” எனவும் இயம்புகின்றார். மறவாக் கதம் - நீங்காத கோபம். முற்றவும் நீங்காத தன்மை யுடையதாதலின் கோபத்தை, “மறவாக் கதம்” என்று குறிக்கின்றார். பூம்பதம் - அழகிய திருவடி. சிவனடியே சிந்தித்தொழுகும் செம்மை நிலையை “நல்ல பதம்” என்று புகழ்கின்றார்.

     (2)