4729.

     குலத்திலே சமயக் குழியிலே நரகக்
          குழியிலே குமைந்துவீண் பொழுது
     நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
          நிற்கின்றார் நிற்கநான் உவந்து
     வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
          மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
     பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
          பண்ணிய தவம்பலித் ததுவே.

உரை:

     பலர் குலச் சிறப்பிலும் சமயக் கொள்கையிலும் கருத்தூன்றி அவற்றால் உண்டாகும் துன்பத்திலே மூழ்கி வருந்தி நிலத்திலே இருந்து வீணே பொழுது போக்கி அறிவு மயங்கி நலம் பெறாது ஏமாந்து ஒழிகின்றார்கள்; நிற்க, நான் மனமகிழ்ந்து வல்லவாறு உன் திருவருள் வசப்பட்டு நிற்கின்றேன்; நீயும் திருவுள்ளம் உவந்து எனது மனமாகிய அம்பலத்திலே நின்று விளங்குகின்றாய்; எனக்கு இதுவே போதுமானது; நான் செய்த தவம் பலித்துவிட்டது. எ.று.

     குலம் - குலச் சிறப்பையும், சமயம் - சமயக் கொள்கையையும் குறிக்கின்றன. முன்னே விடாமல் கெடுப்பது கண்டு, “சமயக் குழி” என்றும், இரண்டும் விளைவிக்கும் துன்ப மிகுதி பற்றி, “நரகக் குழி” என்றும் வெறுக்கின்றார். நரகக் குழி - துன்பக் குழி. போதிய நலம் பெறாது வீழ்கின்றமை, விளங்க, “ஏமாந்து நிற்கின்றார்” என்று கூறுகின்றார். திருவருள் நெறியில் நிற்றல் தோன்ற, “நினது வசத்திலே நின்றேன்” என இயம்புகின்றார்.

     (3)