4730. கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
கொழுநரும் மகளிரும் நாண
நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
நீங்கிடா திருந்துநீ என்னோ
டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
றறிவுரு வாகிநான் உனையே
பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
உரை: கூடுதற்கும் பின்பு பிரிதற்கும் அமைந்த கணவரும் மகளிரும் கண்டு நாணுமாறு, என் மனத்திற் கலந்து கொண்டு எப்போதும் நீங்காமல் இருந்து என்னோட இயங்கவும், எல்லாம் செய்ய வல்ல சித்திகளைப் பெற்று அறிவுருவை எய்தி நான் உன்னையே பாடிப் பெறும் நலத்தைப் பெற்றுக் கொண்டேன்; எனக்கு இதுவே அமையும்; நான் செய்த தவமும் எனக்குப் பலிதமாயிற்று, காண். எ.று.
கணவன் மனைவியர், வாழ்வில் புணர்தலும் பிரிதலும் இயற்கையாதலின் அதனை விதந்து, “கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நாண” என்று கூறுகின்றார். நாணம் நீட - நாணம் அடைய. ஆடுதல் - உடனிருந்து இயலுதல். “எங்கே போவேனாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச் சங்கை யொன்று மின்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே” என நம்பியாரூரர் உரைப்பது காண்க. சிவம் ஞானாமூர்த்தமாதலின் அதனை யடைந்த தாம் ஞான வுருவாயினமை விளங்க, “அறிவுருவாகி” என்று உரைக்கின்றார். (4)
|