4731.

     உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
          வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
     நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
          நாட்டமும் கற்பகோ டியினும்
     வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
          வழங்கிடப் பெற்றனன் மரண
     பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
          பண்ணிய தவம்பலித் ததுவே.

உரை:

     இவ்வுலகில் நெடிது வாழ்தற்கு வேண்டும் உறுதி யறியாமல் இறந்தவர்களை மீட்டும் உயிர் பெற்று நயமுற மீள வருவிக்கும் ஒப்பற்ற ஞான விருப்பமும், கற்ப கோடி காலமும், வன்மையுடன் சாகா வரமும் எனக்கு நீ நல்கப் பெற்றேன்; அதனால் மரண பயத்தையும் போக்கிக் கொண்டேன்; ஆதலால் எனக்கு இது ஒன்றே போதும்; நான் செய்த தவமும் பயன் தந்துவிட்டது காண். எ.று.

     உயத்திடம் - நெடிது உய்தற்குரிய உறுதியான அறிவும் நயத்தொடு வருவித்தலாவது இறத்தற்கு முன்னிருந்து உயிர் உணர்வோடு வருவித்தல். ஞான நாட்டம் - ஒப்பற்ற ஞான வேட்கை. கற்ப கோடி பல ஆண்டுகள். வய - வலிமை. சாகா வரம் பெற்றதனால் இனி மரணத்திற்கு அஞ்ச மாட்டேன் என்பார், “மரண பயத்தை விட்டொழிந்தேன்” என்று கூறுகின்றார்.

     (5)