4732. நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
நாதனை என்உளே கண்டு
கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
கூடிடக் குலவிஇன் புருவாய்
ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
அம்பலம் தன்னையே குறித்துப்
பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
உரை: நான் அருட்பெருஞ் சோதியையே நாடுகின்றேன்; நாதனாகிய அந்த ஆண்டவன் என் உள்ளத்திலே கண்டு கூடி மகிழ்கின்றேன்; நான் எண்ணுகின்ற எண்ணமெல்லாம் கைகூடுதலால் அன்பரொடு கலந்து இன்ப உருவாய் இயலுகின்றேன்; சித்துக்கள் எல்லாவற்றையும் செய்ய வல்லவனாகிய சிவனுடைய அம்பலத்தையே குறிக் கொண்டு பாடுகின்றேன்; எனக்கு இதுவே போதுமானது; நான் பண்ணிய தவமும் பலித்து விட்டது. எ.று.
அருளுருவாகிய சிவனுடைய ஞானப் பேரொளியைக் காண விழைகின்ற குறிப்பு விளங்க, “அருட்பெருஞ் சோதியை நாடல் செய்கின்றேன்” என்று கூறுகின்றார். நாணுகின்றேன் என்றது நாடல் செய்கின்றேன் என்று வந்தது. இவ்வாறே கூடுகின்றேன், ஆடுகின்றேன், பாடுகின்றேன் என்பவை கூடல் செய்கின்றேன், ஆடல் செய்கின்றேன், பாடல் செய்கின்றேன் என வந்துள்ளன. உள்ளே என்பது உளே என்று நிற்கின்றது. உலவுதல் - கூடிக் கலந்து மகிழ்தல். கன்ம சித்தி, யோக சித்தி, ஞான சித்தி என வருகின்ற சித்திகள் எல்லாம் அடங்க, “சித்தெலாம்” என உரைக்கப்படுகிறது. (6)
|