4734. புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
கருத்தொடு வாழவும் கருத்தில்
துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
துலங்கவும் திருவருட் சோதிப்
பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
உரை: அரண் பொருந்திய வானுலகம் நிலவுலகம் ஆகிய எல்லா வுலகங்களும் புண்ணிய உலகங்களாய் மேன்மையுற்று, குற்றங்கள் எல்லாம் நீங்கி நலங்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கருத்தோடு வாழவும், உள்ளத்தில் படிந்துள்ள குற்றங்கள் எல்லாவற்றையும் போக்குவதாகிய சுத்த சன்மார்க்கம் சிறப்புறவும் திருவருட் சோதியினுடைய அருள் நலம் எல்லாம் பெற்றுக் கொண்டேன்; எனக்கு இது போதும்; யான் பண்ணிய தவமும் பலித்து விட்டது. எ.று.
புரிசை - அரண். புண்ணிய உலகம் - இன்ப உலகம். பொலிதல் - மேன்மையுறுதல். கரிசு - துரிசு என்பன குற்றங்களைக் குறிக்கும் சொற்களாகும். களிப்பு - இன்பம். தன்னைச் சேர்ந்தவர்களுடைய மனத்தில் படிகின்ற குற்ற வகையில் எல்லாவற்றிலும் போக்கி ஞான ஒளி பெறுவிப்பது சுத்த சன்மார்க்கம் என விளம்புவாராய், “கருத்தில் துரிசெலாம் தவிர்க்கும் சுத்த சன்மார்க்கம்” என்று சொல்லுகின்றார். அருட்சோதி ஆண்டவருடைய திருவருளைத் “திருவருட் சோதிப் பரிசு” என்று புகல்கின்றார். (8)
|