4735. வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
வெம்மையே நீங்கிட விமல
வாதமே வழங்க வானமே முழங்க
வையமே உய்யஓர் பரம
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
நன்மணி மன்றிலே நடிக்கும்
பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
உரை: வேதங்கள் விளக்கமுறவும், சத்தியம் நிலைபெறவும், வெவ்விய கொடுமை நீங்கவும், தீது விளைக்காத வாதங்களே நிலவவும், மழை மேகங்கள் முழங்கவும், மண்ணுலகம் உய்யவும், ஒப்பற்ற மேலான பிரணவ நாதம் எங்கும் ஒலிக்கவும் ஞானத் திருவுருக் கொண்டு நல்ல அழகிய அம்பலத்திலே நடிக்கும் திருவடியையே பற்றாகக் கைப்பிடித்துக் கொண்டேன்; ஆகலின் இது ஒன்றே எனக்குப் போதும்; யான் பண்ணிய தவம் பலித்து விட்டது. எ.று.
வேத ஞானமே எங்கும் எவர்பாலும் நிலவ வேண்டும் என்றற்கு, “வேதமே விளங்க” என விளம்புகின்றார். வெம்மை - கொடுமை. விமல வாதம் - தீதின்றி உண்மை காணப் புரியும் சொற்போரை “விமல வாதம்” என்று குறிக்கின்றார். வாதப் பிரதிவாதங்களால் துன்பம் உண்டாகாதது விமல வாதம் எனினும் பொருந்தும். வானம் - மழை மேகம். மழையால் நலமும் வளமும் பெறுவது மண்ணுலகமாதலால், “வானமே முழங்க வையமே உய்ய” என வுரைக்கின்றார். பரம நாதம் என்பது சமஷ்டியும் வியஷ்டியுமாகிய பிரணவ நாதம். நன்மணி மன்று - நல்ல மணிகளால் இழைக்கப்பெற்று அழகு மிகும் ஞான சபை. (9)
|