4736. கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
உரை: வருத்தம் - மனக்கவலை, கலக்கம் முதலிய எல்லாம் நீங்கினேன்; பிறவி வகுக்கும் வரையறைகளையும் போக்கி விட்டேன்; உறக்கத்தையும் மரணத்தையும் நோவையும் போக்கி கொண்டேன்; ஞானமும் அடைந்தேன்; சிற்சபையை யுடைய சிவபெருமானுக்கு மெய்யான செல்வப் பிள்ளை யென்ற ஒரு சிறப்புப் பெயரையும் பூண்டிருக்கின்றேன்; எனக்கு இதுவே போதும்; செய்த தவமும் எனக்குப் பலித்து விட்டது. எ.று.
கஷ்டம் என்பது கட்டம் என வந்தது. பிறவிச் சட்டம் - பிறப்புக் குளதாகிய வரையறைகள். தூக்கம் - உறக்கம். சிட்டம் - கல்வி ஞானம். மிக்க அன்பு செய்யப்பட்ட பிள்ளை என்பது விளங்க, “செல்வ மெய்ப்பிள்ளை” என வந்தது. பட்டம் - சிறப்புப் பெயர். (10)
|