4740. வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும்
புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத்
திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி
நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே.
உரை: எல்லையில்லாத சிறப்பு பொருந்திய பெரிய அருள் வாழ்வு தந்து என் உள்ளத்தில் நிலைபெற்று என்றும் ஒரு குற்றமில்லாத மெய்ம்மை சான்ற உயர்நிலையில் என்னை உயர்த்தி மெய்ஞ்ஞான சபையின்கண் மறைப்பில்லாத திருவருள் காட்சியை எனக்களித்துத் திருவருளாகிய தெளிந்த அமுதத்தை எனக்குத் தந்து நரை திரை மூப்பு மரணம் ஆகிய யாவுமின்றி நிலைத்திருக்கும் சிறப்பை எனக்குத் திருவருள் நல்கியுளது காண். எ.று.
வரை - எல்லை. திருவருள் வாழ்வை “வரையற்ற சீர்ப் பெருவாழ்வு” என்று தெரிவிக்கின்றார். புரை - குற்றம். மெய்ந்நிலை - திருவருட் பேற்றுக்குரிய உயர்நிலை. ஞானப் பொது - மெய்ஞ் ஞான சபை. திரையற்ற காட்சி - மறைக்கப்படுதல் இல்லாத தெளிவுக் காட்சி சாகா வரம் தந்தருளியது என்பாராய், “நரையற்று மூப்பற்று இறப்பற்று இருக்கவும் திருவருள் நல்கியது” என மொழிகின்றார். (4)
|