4742.

          ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
          நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
          சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
          சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.

உரை:

     ஆதியந்தமில்லாத ஒப்பற்ற ஒளியாய், இன்பம் தரும் நீதியும் நற்பண்பும் உலகத்தில் ஓங்குதற்கு ஞான சபையில் நடனம் புரிகின்ற சோதியும், வேத மூர்த்தியும் நீயே என்று நான் அறிந்து கொண்டேன்; ஆதலால், வேற்றுமைபடுத்துகின்ற சாதி உணர்வும் சமய உணர்வும் துறந்து தனிப்பட்டவனாயினேன். எ.று.

     ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ் சோதி என்று பெரியோர் பாராட்டுதலால், “ஆதியும் அந்தமு மில்லாத் தனிச்சுடராகி” என்று கூறுகின்றார். நீர்மை - நற்பண்பு. உலகில் இன்பம் நிலவுதற் கேற்ற நீதிமுறையும் நல்ல பண்பும் ஒழுக்கமும் ஓங்குதற் பொருட்டே இறைவன் ஞான சபையில் கூத்தாடுகின்றான் என்பதுபற்றி, “இன்ப நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும் சோதி” என்று சொல்லுகின்றார். பொது - ஞான சபை. நிருத்தம் - திருக்கூத்து. வேதங்களை ஓதுபவனும் ஓதுவிப்பவனுமாதலால் சிவனை “வேதி” என்று விளம்புகின்றார். செக தலம் - நிலவுலகம். வேதச் சாதியும் எனக் கூட்டுக. சாதி உணர்வும் சமய உணர்வும் மக்களை ஒருமைப் படுத்தாது வேற்றுமைபடுத்தி துன்பத்துக்குள்ளாக்குதலின் அவற்றின் பிடிப்பிலிருந்து விலகித் தனிப்பட்டுவிட்டேன் என்பாராய், வடலூர் வள்ளல், “இச்செக தலத்தில் சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித் தனனே” என்று சாற்றுகின்றார்.

     (6)