4743.

          தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை
          இன்னே அடைகுவித் தின்பருள் வாய்இது வேதருணம்
          அன்னே எனைப்பெற்ற அப்பாஎன் றுன்னை அடிக்கடிக்கே
          சொன்னேன்முன் சொல்லுகின் றேன்பிற ஏதுந் துணிந்திலனே.

உரை:

     என்னைப் பெற்ற அன்னையும் அப்பனுமானவனே! தனக்கு ஒப்பொருவருமில்லாத தலைவனே! உன்னை அடிக்கடி அம்மையப்பா என்று முன்னே சொன்னேன்; பின்னும் சொல்லுகின்றேன்; வேறு எதனையும் எண்ணித் துணிந்திலேன்; ஆதலால், நின்னுடைய ஞான சபையின்கண் என்னை இப்பொழுதே அடைந்திடுகின்ற இன்ப வாழ்வை எனக்கு அருள்வாயாக; அதற்கு இதுவே தருணம் காண். எ.று.

     சிற்றம்பலம் - ஞான சபை. சிவஞானிகள் பலர் ஞான சபைக்குள் புகுந்து சிவமாய் இன்புற்றார்களாதலின், தம்மையும் அவ்வாறு இன்பம் எய்தச் செய்க என்று வேண்டுகின்றாராதலால், “சிற்றம்பலம் தன்னில் என்னை இன்னே அடைகுவித்து இன்பருள்வாய் இதுவே தருணம்” என்று வேண்டுகின்றார். அன்னையும் அப்பனும் ஒழிய வேறு யாரும் நலம் செய்யும் நற்பன்புடையவர் அல்லராதலின் நான் தெளிந்திருக் கின்றேனாதலால், “அன்னே எனைப் பெற்ற அப்பா என்று உன்னை அடிக்கடிக்கே முன் சொன்னேன் சொல்லுகின்றேன்; பிற ஏதும் துணிந்திலேன்” என்று வற்புறுத்துகின்றார்.

     (7)