4744.

          தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே
          மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்
          நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்
          சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.

உரை:

     ஆண்டவனே! என் உடல் பொருள் உயிர் மூன்றையும் உனக்கே கொடுத்துவிட்டேன்; உன்னுடைய திருவடிக்கண் ஒடுங்குதற்குப் பெருவேட்கை யுடையவன் என்று உலகத்தவர்கள் அலர் தூற்றும் நிலையைப் பெற முயலுகின்றேன்; தேவருலகத் தலைவர்கள் கண்டு வியக்குமாறு என்னுடைய எதிரே தோன்றி எக்காலத்தும் சாகா வரம் தந்து சன்மார்க்க நீதிகளையும் எனக்கு உரைத்தருளுவாயாக. எ.று.

     தேகாதி மூன்று - தேகம், பொருள், ஆவி மூன்றுமாம். மோகாதிபன் - பெருமோகம் உடையவன். மோகம் - வேட்கைப் பெருக்கம். என்னைக் காண்பவர் இவன் ஒரு சிவபாத மோகம் மிக வுடையவன் என்று பழித்தல் வேண்டும் என்பாராய், “திருவடிக்கே மோகாதிபன் என்று உலகவர் தூற்ற முயலுகிகின்றேன்” என்று மொழிகின்றார். நாகாதிபர் - இந்திரன் முதலிய தேவர் தலைவர்கள். நாகம் - தேவருலகம். சாகா வரம் பெற்றுச் சன்மார்க்க நீதியைக் கைக்கொள்ளாவிடின் பயனில்லையாதலால், “என்றும் சாகா வரம் தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுக” என்று வேண்டுகின்றார்.

     (8)