4745.

          கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
          உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
          பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்
          பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.

உரை:

     ஞான சபையை அடைதற்குரிய ஞானக் கல்வியே நன்கு கற்றுத் திருவருள் நெறியை மேற்கொண்டு எக்காலத்திலும் சாவுறாமல் ஓங்குகின்ற ஒளி வடிவம் பெற்றுச் சிவஞானியாகும் உயர்ந்த நிலையைப் பெற்றுக் கொண்டேன்; இவ்வுலகில் வேறு நிலைகளை எண்ணாமல் சிவானந்தப் பேறு ஒன்றே எனக்குப் பற்றாது; அதனையே பற்றி உள்ளேன். எ.று.

     சிற்றம்பலம் - ஞானசபை. அதன் சிறப்பையும் அதனை யடையும் நெறியையும் கற்பிக்கும் கல்வி “சிற்றம்பலக் கல்வி” எனப்படுகிறது. அக் கல்வியால் அறிவது திருவருள் ஞான நெறியாதலால், “கற்றுக் கருணை நெறி யுற்று” என்று கூறுகின்றார். ஒளி வடிவப் பேறு சாவா நிலைக்கு ஏதுவும் பயனுமாதலால், “எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் பெற்றேன்” என வுரைக்கின்றார். ஒளி வடிவம் சிவகதிக்கு உரியதாகலின் அதனைத் தாம் பெற்றமை புலப்பட, “உயர்நிலை பெற்றேன்” என்றும், உலகியல் நிலைகளில் ஒளி வடிவும் ஒளி யின்பமும் தரமாட்டாவாகலின் அவற்றைக் கையொழித்தேன் என்பாராய், “உலகில் பிற நிலையைப் பெற்றேன்” என்றும், இனித் தமக்குப் பற்றுக்கோடாவது சிவானந்தப் பேறு ஒன்றே என வற்புறுத்தற்கு, “சிவானந்தப் பற்றே என் பற்றெனப் பற்றினன்” என்றும் இயம்புகின்றார்.

     (9)