4749.

     வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
          மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
     போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
          பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
     பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
          பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
     நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
          நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.

உரை:

     வேதாந்த நிலையையும் அதன் முடிவில் விளங்கும் மெய்ம்மை நிலையையும் காணச் செய்து பின்னர் விளங்குகின்ற சித்தாந்தத்தின் ஞான முடிவு நிலையையும் அதற்கு அப்பால் சொல்லுதற் கரியதாகிய பிரமப் பொருள் நிலையையும் எனக்குத் தெரிவித்தாய்; புண்ணிய மூர்த்தியாகிய உம்முடைய திருவடி முடிவையும் எனக்குத் தெரிவித்தீர்; அதன் மேல் உமது சுத்த வடிவுடன் சொல்லப்படுகின்ற பிரணவ வடிவின் இயல்பையும் எனக்கு அறிவித்தருளினீர்; அதனோடு நாத தத்துவ முடிவாகிய உபசாந்தத்தை நான் அடைந்து ஒப்பற்ற செங்கோல் நடத்தும் நலத்தினைக் கொடுத்தருளினீர்; நடராசப் பெருமானாகிய உமக்கு நான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     வேதாந்த நிலை - உபநி்டதங்களை உரைக்கின்ற உண்மை நிலை. அதன் அந்தத்திலே விளங்கும் மெய்ந்நிலையானது அவற்றின் முடிவாகத் தெளியப்படும் பிரம நிலை. சித்தாந்தத்தின் போதாந்தமாவது சித்தாந்த ஞான நூல்கள் உரைக்கும் சிவானந்தப் பெருநிலை. பெரிய பொருள் - பிரமமாகிய செம்பொருள். பாதாந்தம் - திருவடியின் அழகு. பிரணவாகாரம் - பிரணவ தேகம். நாதாந்தம் - நாத தத்துவத்திற்கு அப்பாலதாகிய உபசாந்தப் பெருவெளி.

     (3)