4750.

     ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா
          அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே
     ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றீந்துமகிழ்ந் தாண்டீர்
          இன்றும்வலிந் தெளியேன்பால் எய்திஒளி ஓங்கப்
     பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர்
          பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்தீர்
     நார்நீட நான்தானாய் நடம்புரிகின் றீரே
          நடராஜ ரேநுமக்கு நான்ஏதுசெய் வேனே.

உரை:

     நடராசப் பெருமானே! எனக்கு எதிரே வந்து நீ யார் என்று கேட்டால் விடை பகரத் தெரியாத அறிவில்லாதவனாகிய என் பொருட்டு அன்றொருநாள் வந்து எனக்கு அழகு மிகும் பெரிய பொருள் ஒன்றைத் தந்து மகிழ்ந்து என்னை ஆட்கொண்டீர்; இன்றும் எளியவனாகிய என்னிடம் வலிய வந்து ஞான ஒளி சிறக்குமாறு பூவுலகத்தில் நெடிது வாழத் திருவருளாகிய பெரிய சோதி ஒன்றை எனக்கு அளித்தருளினீர்; பின்னர் மேலோர் புகழ்ந்தோதும் எல்லாம் செயல் வல்ல சித்திகளைப் பெறுதற்குரிய பண்பு எனக்கு எய்தவும் செய்தருளினீர்; அன்றியும் எனக்குள் அன்பு பெருக நான் சிவமாந் தன்மை எய்த திருநடனம் புரிகின்றீர்; இவ்வருட் செயலுக்கு நான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     தன்னை இன்னாள் என்று சொல்லத் தெரியாத அறிவில்லாதவன் என்றற்கு, “ஆர் நீ என்று எதிர் வினவில் விடை கொடுக்கத் தெரியா அறிவிலி” என்று தம்மைக் கூறுகின்றார். ஏர் - அழகு. தாம் பெற்ற திருவருள் ஞானத்தைப் “பெரும் பொருள்” என்று தெரிவிக்கின்றார். அதனிற் பெருமை நிறைந்தது வேறின்மையின் பெரும் பொருள் எனப் பொருந்த உரைக்கின்றார். வலிய வந்து என்பது வலிந்து என வந்தது. என்னிடத்திலும் தமது ஞான ஒளி எய்தி விளங்குதற் பொருட்டுத் திருவருள் ஞான ஒளி தரப்பட்டது என்றற்கு, “ஒளி யோங்கத் திருவருளாம் பெருஞ் சோதி அளித்தீர்” என உரைக்கின்றார். பார் நீடுதலாவது - பூவுலகில் நெடிது வாழ்தல். திருவருள் ஞான ஒளி தந்து எல்லாம் வல்ல சித்திகளையும் செய்யும் நற்பண்பு எனக்கு உண்டாகச் செய்தீர் என்பாராய், “எல்லாம் வல்ல சித்திப் பண்புறவும் செய்தீர்” என்று பகர்கின்றார். உறுதல் - உண்டாகுதல். நார் - அன்பு. தானாக என்பது தானாய் என வந்தது.

     (4)