4751.

     பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
          பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
     ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
          அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
     வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
          மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
     சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
          திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.

உரை:

     நான் பெற்ற குழந்தை அழுமுன்பே எடுத்து அனைத்துக் கொள்ளும் தாய் போன்றவனே! திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற சிவஞானத்தை நல்கும் குருமூர்த்தியே! முற்பட்டு விளங்கும் வேதங்கள் எல்லாம் பாடுகின்ற பாட்டுக்கள் யாவும் சிவத்தைப் பாடும் திருப்பாட்டுக்கள் என்று அறிந்துகொண்டேன்; ஆயினும், சிவ பரம்பொருளாகிய உன்னுடைய பெருமையைப் பல்லாயிரம்கோடி நா வுடைய வராயினும் அவர்களால் அணுவளவும் ஓதுவதென்பது அரிதாகும்; ஐயோ, மிகவும் சிறுமையுடையவனாகிய நான் வாய் சோராதபடி ஓத முற்பட்டுள்ளேன்; என்னுடைய மனத்தின்கண் உளதாகிய ஆசை ஒரு கடலளவன்று, எழுகடலளவினும் பெரிதாகும். எ.று.

     சேய் - பெற்ற குழந்தை. பாயிரம் - முன்னுரை. இறைவன் புகழைப் பாடுமிடத்துத் தொடக்க உரையாகப் பாடப்படுவதால், “பாயிரமாம் மறைகளெல்லாம்” என்று சிறப்பிக்கின்றார். வேதங்கள் யாவும் சிவ பரம்பொருளையே பாடுகின்றன என்பது பற்றி, “மறைகளெல்லாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன்” என்று உரைக்கின்றார். ஆயிரம் கோடி நாவுடையவன் ஆதிசேடன் என்பர். வாய் இரங்கா வகை புகலத் துணிந்தேன், என்ன செய்துவிட்டேன் என்று வாயாற் சொல்லி வருந்தாதபடி வாய்விட்டு பாடலுற்றேன். சிவஞான குரு - சிவஞானத்தைப் போதிக்கும் ஞான தேசிகன்.

     (5)