4752. ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
உரை: நடராச மூர்த்தியாகிய குருபரனே! தலைமை பெற்ற ஞானிகள் எடுத்துரைக்கும் பெயர் எல்லையையும் குணம் கூறும் எல்லையையும் கடந்து விளங்குகின்ற உபசாந்தப் பெருவெளிக்கு மேல் கூடாமல் கூடி இருக்கின்ற தலைவனாகிய பெருமானே! நடராச மூர்த்தியாகிய குருவே! உடம்பொடு கூடி வாழும் உயிர்களின் அளவையும் உலகின் அளவையும் அறிய மாட்டாத யான் உன்னுடைய பேரளவை அறிகிலேன்; ஆனால் என்னுடைய அறிவளவை நீ நன்கு அறிவாய்; வானுலகத்து தேவர்களும் உன்னுடைய அளவை அறிய மாட்டாமல் வருந்துகின்றார்கள்; வேதங்களும் உன்னுடைய இயல்புகளை வகுத்துரைக்கத் தெரியாமல் தடுமாறுகின்றன; அங்ஙனமிருக்க, உன்னுடைய இயலை எண்ணி உரைப்பதற்கு நான் யார்; நான் என்று சொல்லுதற்கே நான் வெட்கப்படுகிறேன். எ.று.
ஊன் - ஊன் கலந்த உடம்பு. பசுவாகிய உயிரளவையும் பாசமாகிய உலகளவையும் இனிது அறியாத நான் பதியாகிய உன்னுடைய அளவை அறிய மாட்டேன் என்பாராய், “உயிரளவும் உலகளவும் அறியேன்; உன்னளவை அறிவேனோ” என்று உரைக்கின்றார். பசுவும் பாசமுமாகிய இரண்டினையும் நன்கு அறிந்துள்ளது போல என்னுடைய இயல்புகளையும் நீ நன்கு அறிந்திருக்கின்றாய் என உரைத்தற்கு, “என் அளவை அறிந்தோய்?” என்றும், உன் அளவை அறியாதவர்களில் நான் மாத்திரமன்று தேவர்களும் வேதங்களும் அறியாமல் அறிவு கலங்குகின்றார்கள் என்பது விளங்க, “வான் உரைக்க மாட்டாது வருந்தின மறையும் வகுத்துரைக்க அறியாது மயங்கின” என மொழிந்து, இந்நிலையில் நான் உரைக்க முடியாது, உரைக்கும் தகுதியும் எனக்கில்லை என்பாராய், “நான் உரைக்க நான் ஆரோ” என்றும் நவில்கின்றார். நீ வேறு நான் வேறு நின்றாலன்றி அறிந்துரைப்பது ஆகாதாக வேறாய் நின்று நான் சொல்லுவதற்கு எனக்கு வெட்கமாய் இருக்கிறது என்பாராய், “நான் எனவே நாணுகின்றேன்” என்று கூறுகின்றார். கோன் - ஞானத் தலைவர். பசு பாசப் பொருள்களின் பெயரும் குணமுமாகிய பொருள்களை ஆராய்ந்து உரைப்பவர் ஞானிகளாதலால், “கோன் உரைக்கும் குறி குணங்கள்” என்று கூறுகின்றார். பெருவெளி - வியோமப் பெருவெளிக்கு மேலதாகிய உபசாந்தப் பெருவெளி. அப்பெருவெளியில் சிவயோக சிவ ஞானிகளுக்கு ஓரொருகால் தோன்றுவது விளங்க, “பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே” என்று கூறுகின்றார். குறி குணங்கடந்த பெருவெளியைக் கண்டறியாத நான் நின் இயலை கண்டறியேனாதலால் “நான் உரைக்க நான் ஆரோ” என்று நவில்கின்றார். இறைவன் இயலை அவனோடு ஒன்றி “நான்” அற்று நிற்பவர்க்கே அறிதல் கூடுமாதலால், “நான் எனவே நாணுகின்றேன்” என்று இயம்புகின்றார். (6)
|