4754. பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.
உரை: அம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற உம்முடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை என் தலைமேல் அமரச் செய்தீர்; உம்முடைய புதிய அருளமுதத்தை எனக்களித்து என்னுடைய குற்றங்கள் எல்லாவற்றையும் பொருத்தருளுவீர்; நான்காகிய வேதங்களும் பலவாகிய ஆகமங்களும் ஆகிய எல்லாம் சொல்லுதற்கரிய பெரிய ஒப்பற்ற தலைமை சான்ற தந்தையாகிய சிவபெருமானே! சாகாத வரமும் எது நினைத்தேனோ அதனை நினைத்தது போலவே செய்யும் திறமும் இன்ப அனுபவ நிலையும் எனக்கு அருள் புரிவதற்கு இதுவே சமயம் என்று நான் சொன்னேன்; சொல்லி முடிப்பதற்கு முன்பே எனக்கு அருள் செய்தீர்; என் மீது உமக்கு இருந்த அன்பின் திறத்தை என்னென்று சொல்லுவேன். எ.று.
மலரடி - தாமரைப் பூப்போன்ற திருவடி. பொது - அம்பலம். தாம் பெற்ற அருள் ஞானத்தின் புதுமை புலப்பட, “புத்தமுதம்” என்று புகல்கின்றார். புன்மை - குற்றங்கள். சதுமறை - நான்காகிய வேதங்கள். வேதங்கள் நான்கு என்பது போலச் சொல்ல வியலாதவாறு பலவாக இருப்பதால் ஆகமங்கள் எனப் பொதுப்படக் கூறுகின்றார. நினைத்தது நினைத்தாங்கு செய்யும் நீர்மை தமக்கு எய்த வேண்டும் என்பார், “எது நினைத்தேன் நினைத்தாங்கு அது புரியும் திறம்” என்று உரைக்கின்றார். திருவருள் இன்பத்தை ஆற நுகர்தல் வேண்டும் என்பதற்கு இன்ப அனுபவ நிலையைக் குறிக்கின்றார். இவை அனைத்தும் தாம் இனிது பெற்றமை பற்றி, “என்புடை நும் அன்பிருந்தவாறு என்புகல்வேன்” என்று இயம்புகின்றார். இறைவன் திருவருள் எளிதில் பெற்றமை தோன்ற இவ்வாறு கூறுகின்றார் என அறிக. (8)
|