4755.

     கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்
          கண்ணனையீர் கனகசபை கருதியசிற் சபைமுன்
     துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்
          துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை
     விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம்
          விரைந்தருள வேண்டுமென விரும்பிநின்றேன் அடியேன்
     பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்
          பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே.

உரை:

     எனக்குக் கண் போன்ற பெருமானே! கரும்பினும் மிக்க இனிமை சுவையையுடைய கருணையாகிய அமுதத்தை எனக்கு அளித்தீர்; பொற்சபையில் விளங்குகின்ற ஞான சபையின்முன் துரும்பினும் மிகவும் சிறுமையுடையவனாகிய நான் அக்காலத்தே நின்று துயரப்பட்டேன்; அப்பொழுது, மகனே, நீ வருந்த வேண்டா என்று எனக்கு ஒருகால் எல்லையை உரைத்தீர்; தலைவரே, அந்த எல்லை நான் விருப்பம் மிக முடிந்துவிட்டது; இனி எனக்கு அருளுவதற்கு இதுதான் தருணம்; இந்த தருணத்தில் எனக்கு உமது திருவருளை விரைந்து செய்யவேண்டும் எனச் சொல்லி நின்றேனாக, அடியேன் செய்துள்ள பெரிய பிழைகள் எல்லாவற்றையும் பொறுத்தருளி இந்நாளில் பெற்ற தாயினும் மிகுதியாக எனக்கு அருள் செய்திருக்கிறீர்; உமது திருவருட் பெருமையை என்னென்பேன். எ.று.

     திருவருள் ஞானத்தின் சிறப்பை உணர்த்துதற்கு, “கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது” என்று புகழ்கின்றார். கனக சபையின் அகத்தில் சிறக்க இருப்பது ஞான சபை என்பாராய், “கனக சபை கருதிய சிற்சபை” என்று கட்டுரைக்கின்றார். துயர்ந்தேன் - துயரேல் என்பன துயர் என்னும் பெயரடியாகப் பிறந்த தெரிநிலை வினைகள். துரை - தலைவன். எல்லை - கால எல்லை. பெற்றவள் - பெற்ற தாய்.

     (9)