4756. அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
அருளைநினைத் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்
முந்நாளில் யான்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு
முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச்
செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன்
சிந்தைமலர்ந் திருந்தேன்அச் செல்வமிகு திருநாள்
இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன்
என்பதன்முன் அளித்தீர்நும் அன்புலகில் பெரிதே.
உரை: மிக்க சிறுமை யுடையவனாகிய நான் அந்நாளில் பொன்னம்பல வாயிலில் இருந்து உனது திருவருளை நினைந்து ஒருபுறத்தே மனம் சோர்ந்து அழுது நின்றேன்; அந்நிலையில் முன்னை நாட்களில் யான் செய்த பெரிய தவப் பயனாக முகமலர்ந்து எனக்கு நீ மொழிந்த அருள் நிறைந்த சொற்களை நினைந்து நீர் குறித்தருளிய அந்தச் செம்மை சான்ற நன்னாளை எதிர்பார்த்து மகிழ்ச்சியுடன் மனம் மலர்ந்து இருந்தேன்; நீ குறித்த அந்தச் சிறப்புமிக்க திருநாள் இந்நாளாதலால் எனக்கு அருள் புரிவீராக என்று வேண்டினேன்; என் சொற்களை நான் சொல்லி முடிப்பதற்குள் உமது திருவருளைச் செய்தருளினீர்; உம்முடைய அன்பு இவ்வுலகில் மிக்க பெருமை யுடையதாகும். எ.று.
அடியவர்களில் கீழ்ப்பட்ட சிறியவன் என்றற்கு, “அடிச் சிறியேன்” என்று கூறுகின்றார். அயர்தல் - சோர்தல். தமது திருவருட் பேற்று முன்னை நாட்களில் செய்த தவம் காரணம் என்பாராய், “முந்நாளில் யான் புரிந்த பெருந் தவத்தால்” என்று மொழிகின்றார். முன்னாளில் என வரற்பாலது முந்நாளில் என எதுகை நோக்கி வந்தது. அருள் மொழி - நான் குறித்துரைத்த அருள் நிறைந்த சொல். சிறப்பு மிக்க நன்னாளைச் “செல்வமிகு திருநாள்” என்று (10)
|