96. திருநடப் புகழ்ச்சி
அஃதாவது, அம்பலத்திலும் அன்பர் உள்ளத்திலும் செய்தருளும் ஞான நடனத்தைப் புகழ்ந்துரைத்தல். இதன்கண் இறைவன் வடலூர் வள்ளல் இருந்த இடம் போந்து ஆண்டருளிய வரலாறு உரைக்கப்படுகிறது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4757. பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது
பராபரனே ஆனந்தப் பதந்தருமெய்ஞ் ஞான
நிதியேமெய்ந் நிறைவேமெய்ந் நிலையேமெய் இன்ப
நிருத்தமிடும் தனித்தலைமை நிபுணமணி விளக்கே
கதியேஎன் கண்ணேஎன் கண்மணியே எனது
கருத்தேஎன் கருத்தில்உற்ற கனிவேசெங் கனியே
துதியேஎன் துரையேஎன் தோழாஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
உரை: எங்கள் பதிப்பொருளே! பரனே! பரம்பரமாகியவனே! எங்களுடைய பராபரனே! இன்ப நிலையைத் தரும் மெய்ஞ்ஞானச் செல்வமே! மெய்ம்மையின் நிறைவே! நிறைவுக்குரிய மெய்ம்மை நிலையே! மெய்யான இன்பம் நல்கும் திருக்கூத்தை யாடுகின்ற ஒப்பற்ற தலைமைச் சிறப்புடைய மாணிக்க மணி விளக்கு போல்பவனே! எங்கட்குக் கதியானவனே! என்னுடைய கண்ணும் கண்மணியைப் போல்பவனே! என்னுடைய கருத்தாயும் கருத்தில் பொருந்திய உருக்கமாயும் இருப்பவனே! செவ்விய கனி போல்பவனே! யாவராலும் துதிக்கப்படுபவனே! எனக்குத் தலைவனும் தோழனுமாகிய பெருமானே! என் உள்ளத் தாமரையில் நின்று திருநடனம் புரிகின்ற சித்த சிகாமணியே வணக்கம். எ.று.
பரன் - மேலானவன். பரம்பரன் - மேன்மேலும் உயர்ந்தவன். பராபரன் - மேலும் கீழுமானவன். நிபுண மணி விளக்கு - சிறப்புடைய மாணிக்க மணியாலாகிய திருவிளக்கு போல்பவன். கனிவு - உருக்கம். எல்லாராலும் துதிக்கப்படுவது பற்றித் “துதியே” என்று சொல்லுகின்றார். சிந்தையின் உச்சியில் விளங்குகின்ற மணி போன்றவன் என்றற்கு, “சித்த சிகாமணி” என்று தெரியக் கூறுகின்றார். சித்தர்களின் சிகாமணி எனக் கொள்ளினும் பொருந்தும். இனி வருமிடங்களிலும் இதுவே கூறிக் கொள்க. (1)
|