4758.

     ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
          அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
     காரணமே காரியமே காரணகா ரியங்கள்
          கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
     பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
          புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
     தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
          சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.

உரை:

     வேத வடிவாகியவனே; ஆகம வடிவாகியவனே! வேதாகமங்களில் அடங்கியிருக்கும் அருமையான பொருளே! அப்பொருளால் விளையும் அனுபவமாகுபவனே! அறிவுருவாயவனே! எல்லாப் பொருட்கும் காரணமும் காரியமுமாகியவனே! காரண காரியங்களை ஆய்ந்தறியும் அறிவெல்லையைக் கடந்த பெரிய பதிப்பொருளே! என் கருத்தின்கண் எழுந்தருளும் அருட்செல்வமே! குறைவற்ற நிறைவாகியவனே! புண்ணிய மூர்த்தியே! ஞான சபையில் விளங்குகின்ற அருளரசே! சிந்தையின்கண் புதிய அமுதமாய் ஊறும் பரம் பொருளே! சத்தியத்தின் உருவே! பொன்னிற மேனியனே! செம் பொருளே! தோரணங்களால் அழகு மிக்கு விளங்கும் சித்தி புரத்திலும் விளங்கும் என் உள்ளத்திலும் நின்று நடம் புரிகின்ற சித்த சிகாமணியே வணக்கம். எ.று.

     வேதாகமங்களால் உரைக்கப்பட்டு உணர்தற்கரிதாகிய நுண்பொருள் என்றற்கு, “ஆரண ஆகமத்தின் அரும்பொருள்” என்று உரைக்கின்றார். காரண காரியங்களை ஆராயும் அறிவெல்லைக்கு அப்பாலுள்ளமை பற்றி, “காரண காரியங்கள் கடந்த பெரும்பதியே” என்றும், சிந்திக்குந் தோறும் சிந்தனையில் புத்தின்பம் தருதலால் சிவபெருமானை, “புத்தமுதே” என்றும் புகழ்கின்றார். வடலூர்க்குச் சித்திபுரம் என்றும் பெயராதலின், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விளங்கும் அதனை, “தோரணமே விளங்கு சித்திபுரம்” என்றுறார்.

     (2)