4759. இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
உரை: ஒப்பு ஒன்றுமில்லாமல் எப்பொருளிலும் நிறைந்து நிற்கின்ற இறைவனே! வேதங்கள் சொல்லுகின்ற ஏகமும் அநேகமுமாய் விளங்குகின்ற பரம்பரனே! அணையிடலாகாதபடி நிறைந்த நீர்நிலை போன்றவனே! நீர் மேல் நிற்கின்ற நெருப்புருவானவனே! எனக்கு அப்பனே! கடல் போன்ற என் துன்பங்கள் எல்லாவற்றையும் கடந்து செல்லுவதற்குத் துணையாகிய தெப்பம் போன்றவனே! மெய்ப்பொருளும் மெய்ப்புகழை யுடையதும் மெய்யான புகலிடமாவதுமாகிய சிவ பரம் பொருளே! அம்பலத்தில் காட்சி தரும் பெருமானே! என்றும் எவ்விடத்தும் எக்காலத்தும் இருப்பதாகிய உள்பொருளே! தற்போதம் இல்லாத சான்றோர்க்கு வேண்டும் உதவி புரிகின்ற துணைவனே! சத்துவ குணச் செல்வனே! தத்துவப் பொருளே! எளியேனுடைய உள்ளத்தில் இருத்து ஞான நடம் புரிகின்ற சித்த சிகாமணியே வணக்கம். எ.று.
ஒப்பாக ஒன்றும் ஒருவரும் இல்லாதபடி உயர்ந்தவனாதலால் சிவனை, “இணை ஏதுமின்றி நின்ற இறைவன்” என்றும், பரம்பொருள் ஒன்றென்றும் பலவென்றும் இடத்துக்கேற்ப வேதங்கள் ஓதுவதால், “மறை சொல் ஏகமுமாய் அநேகமுமாய் இலங்கு பரம் பொருளே” என்றும் இயம்புகின்றார். இலங்குதல் - விளங்குதல். அணை - கரை. பெரும் புனல் என்றது பெரிதாகிய அப்பு தத்துவத்தை. நிலத்துக்கு மேல் தத்துவ வைப்பு முறையில் நிலத்துக்கு மேல் நீரையும், நீர்க்கு மேல் நெருப்பையும், அதற்கு மேல் காற்றையும், அதன் மேல் ஆகாயத்தையும் கூறுபவாதலின், “பெரும் புனலே அதன் மேல் அனலே” எனவுரைக்கின்றார். அவத்தை - துன்பம். கடலலை போல் துன்பங்கள் அடுத்தடுத்து வருதலால் சிவ பரம்பொருளை, “அவத்தை எலாம் கடத்தும் புணையே” என்று புகல்கின்றார். உலகு உயிர்கட்கு முடிவில் ஒடுங்குமிடம் சிவமாதல் விளங்க, “மெய்ப்புகலே” என்று கூறுகின்றார். தற்போதம் - நான் என்னும் ஆணவத்தால் பிறக்கும் அகந்தை உணர்வு. தற்போதம் இல்லார்க் கன்றிச் சிவஞானம் கைகூடாதாகலான், “தற்போதம் இல்லார்க்கு உதவும் துணையே” என்று சொல்லுகின்றார். தத்துவ ஞானத்தால் உணரப்படுவது பற்றிப் பரம்பொருளைத் “தத்துவமே” என்று சாற்றுகின்றார். வணக்கம் என்பது குறிப்பெச்சம். (3)
|