4760. எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனை
வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
உரை: எருதுபோல் இவ்வுலகில் உழைத்துக் கொண்டிருந்த என்பால் மனமிரங்கி அடிச் சிறியவனாகிய யான் இருந்த இடத்துக்கு என்னைத் தேடி வந்து இரண்டாகிய குதிரைகள் பூட்டிய ஒரு அழகிய தேர் மேல் ஏறிக்கொண்டு என்னை ஆளாக உடையவளாகிய உமாதேவியுடன் நான் இருந்த மனையை அடைந்து உள்வாயிற் கதவின் தாழ் பிடித்துக்கொண்டு பயத்தோடு நின்ற என்னை வருக எனக் கைகளை அசைத்தழைத்து என்னைத் தன்பால் அழைத்துக் கொண்ட தலைவனாகிய பெருமானே! எனக்கு மணியும் மருந்துமாய் என்னை வாழ்விக்கும் பரம்பொருளே! எனக்கு வரமாய் எய்தினவனே! வேதங்களின் உச்சியைத் தனக்கு இருக்கையாகக் கொண்ட துரையே! என் உள்ளத் தாமரையில் தூய ஞான நடம் புரிகின்ற சித்த சிகாமணியே வணக்கம். எ.று.
நிகரற்ற உழைப்புக்கு உவமையாக விளங்குவது எருதாகலின், “எருதின் உழைத்திருந்தேன்” என உரைக்கின்றார். எல்லார்க்கும் கீழ்ப்பட்ட சிறுமையுடையவன் எனத் தம்மை புலப்படுத்தற்கு, “அடிச் சிறியேன்” எனக் கூறுகின்றார். இரட்டைக் குதிரைகள் பூட்டிய அழகிய தேர் எனச் சிறப்பிப்பாராய், “இடைப்பரிமான் ஈர்க்கும் ஒரு திருத்தேர்” என்று குறிக்கின்றார். என்னை யுடையவள் - என்னைத் தனக்கு ஆளாக யுடைய தாயாகிய உமாதேவி. வாழ்வு தருபவனை வாழ்வே என்பது உபசாரம். வேத ஞானத்தின் உச்சியில் வீற்றிருந்தருளுவது பற்றிச் சிவபெருமானை, “சுருதி முடி அடிக் கணிந்த துரையே” என்று சொல்லுகின்றார். (4)
|