4761. அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே
முகவடிவந் தனைக்காட்டிக் களித்துவியந் திடவே
முடிபனைத்தும் உணர்த்திஒரு முன்னிலைஇல் லாதே
சகவடிவில் தானாகி நானாகி நானும்
தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
உரை: குற்றம் பொருந்திய உடம்புடைய என்னைக் கணநேரத்தில் குணமே நிறைந்த உடம்புடையவனாக்கி, திருவருளாகிய ஞானாமிர்தத்தை மகிழ்ந்தளித்து அடிக்கடி என் மனத்தின்கண் திருமுகத்தைக் காட்டி அருளி, நான் உவப்புடன் வியந்து பாராட்டுமாறு பொருள் முடிபனைத்தையும் எனக்குணர்த்தி, ஒருவர் முன்னிலையிலுமின்றி உலக வடிவில் தானாகியும் என் வடிவில் நானாகியும் நானும் தானும் ஒரு வடிவுற்றும் தனித்து விளங்க அருள்பாலித்து தனது இன்ப வடிவத்தைத் தந்தருளிய தலைவனே! என் உள்ளத்தில் ஞான நடம் புரிகின்ற சித்த சிகாமணியே வணக்கம். எ.று.
அகவடிவு - குற்றம் பொருந்திய உடம்பு. அனக வடிவு - குற்றமே யின்றிக் குணமே உருவாகிய உடம்பு. முகத்தைக் காட்டி என்பது முக வடிவம் தனைக்காட்டி என வந்தது. வேதாகமங்கள் உரைக்கும் பொருள் முடிபுகளை “முடிபனைத்தும்” எனப் பொதுப்பட மொழிகின்றார். ஒருவரை முன்னிலைப்படுத்தி அவர் காண நில்லாது உலகமே தனக்கு வடிவமாகத் தன்னைக் காட்டினமையின், “ஒரு முன்னிலை இல்லாதே சக வடிவில் தானாகி” என்று கூறுகின்றார். சுக வடிவம் - சிவமாந் தன்மை அமைந்த வடிவம். (5)
|