4762. உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
உரை: இடையில் உடுத்திய உடையை அவிழ்த்து தரை மேல் விரித்து தன்னைப் பற்றித் தனியாக எண்ணாமல் சிவனை நினைந்து உள்ளத்தில் மிக்குற்ற கலக்கத்தோடு படுத்துக்கிடந்த சிறியவனாகிய என் முன் வந்து அருகே அமர்ந்து, மகனே, உனக்கு உண்டாகிய பயம் யாது என்று வினவி அன்புடன் தனது கையில் என்னையெடுத்து அணைத்துக்கொண்டு வேறோர் இடத்திற்குப் போய் என்னை உட்கார வைத்து என்னை நோக்கிச் சிரித்தருளிய எனது ஆண்டவனே! அருளரசே! சொற்களால் தொடுத்த என் சொன்மாலையை ஏற்றுக் கொண்டு என் மனத்தின்கண் ஞான நடனத்தைப் புரிந்தருளுகின்ற சித்த சிகாமணியே வணக்கம். எ.று.
உன்னுதல் - நினைத்தல். பக்கத்தில் வந்ததை “அருகணைந்து” எனவும், யாதெனுக்கோ அஞ்சியது போல அயர்ந்து கிடந்தமையின், “உளத்துறு கலக்கத்தோடே படுத்தயர்ந்த சிறியேன்” எனவும் பகர்கின்றார். இரு கையாலும் எடுத்தமை விளங்க, “திருக்கரத்தால் அடுத்தணைத்துக் கொண்டு” என்று சொல்லுகின்றார். இனிய சொற்களால் தொடுத்த சொன்மாலை எனவும், அதனை இறைவன் ஏற்றுக் கொண்டமை விளங்க, “அணிந்து கொண்டு” எனவும் உரைக்கின்றார். (6)
|