4763.

     ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
          அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
     போற்றாத குற்றம்எலாம் பொறுத்தருளி எனைஇப்
          பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
     ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
          இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
     தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
          சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.

உரை:

     போதிய ஆற்றலில்லாத அடிச் சிறியவனாகிய எனக்கு ஆற்றல் மிகவுண்டாகக் கொடுத்து எனக்கு அம்மையும் அப்பனுமாய் ஆதரவு செய்து அன்புடன் நான் விலக்காமல் செய்த குற்றம் எல்லாவற்றையும் மன்னித்தருளி இந்த நிலவுலகத்தவரும் வானுலகத்தவரும் என்னை யேற்று நன்கு மதித்திடுமாறு உயர்நிலையில் ஏற்றி வைத்து எல்லாம் வல்ல தலைமைத் தன்மையையும் எனக்குத் தந்தருளிய என்னுடைய இறைவனே! எனக்கு இதுவரையில் தோன்றாத உண்மை எல்லாம் தோன்றி விளங்கச் செய்த தலைவனே! என் உள்ளத் தாமரையின்கண் ஞான நடம் புரிந்தருளுகின்ற சித்த சிகாமணியே வணக்கம். எ.று.

     மெய்வலியும் மனவலியும் இல்லாத சிறுமை யுடையவன் என்றற்குத் தம்மை, “ஆற்றாத அடிச் சிறியேன்” என்று கூறுகின்றார். செய்ய லாகாத குற்றங்களைப் “போற்றாத குற்றம்” என்று புகல்கின்றார். பூதலம் - நிலவுலகம். உயர்நிலை - சிவயோக நிலை. ஞானாசிரியன் ஏற்றினாலன்றிப் பிறர் எவராலும் ஏற மாட்டாத உயிர்நிலையாதலின் சிவயோக நிலை, “ஏற்றாத உயிர்நிலை” எனப்படுகிறது. எல்லாம் வல்ல ஆற்றல் இறைவனுக்கே அமைந்ததாகலின் அதனைத் தாம் பெற்றமை பற்றி, “எல்லாம் வல்ல இறைமை” என்று இயம்புகிறார். இதுகாறும் தம் அறிவுக்கும் புலப்படாது இருந்த ஞான நலத்தை இப்போது தாம் பெற்றதை உணர்த்துவாராய், “எனக்குத் தோற்றாத தோற்றுவித்த துரையே” என்று சொல்லுகின்றார்.

     (7)