4764.

     படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப்
          பார்த்திடலும் அடக்கிஉறும் பரிசம்எலாம் அடக்கித்
     தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தம்எலாம் அடக்கிச்
          சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி
     மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே
          வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்கு குதித்த
     துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே
          சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.

உரை:

     படித்த படிப்பெல்லாம் கைவிட்டுப் பிறர்பால் கேட்டுக் கொண்ட கேள்வி அறிவு அத்தனையும் பற்றற விடுத்துக் கண்ணால் பார்ப்பதையும் ஒடுக்கி மெய்யால் தீண்டி அறியும் பரிசை உணர்வையும் போக்கி உடல் பெருக்க வைக்கும் உணவுச் சுவையையும் அடக்கி விட்டு மூக்கால் பெறலாகும் வாசனை அனுபவத்தையும் விலக்கி விட்டு, சாதி மதம் சமயம் என்னும் பிணக்குகளின் நீங்கிச் சோம்பலாகிய குற்றத்தையும் விடுத்து நின்ற போதிலும் நான் ஒருபோதும் நிற்கமாட்டேன் என்ற கருத்துடன் காட்டில் வாழும் குரங்குகளும் கண்டு வியக்குமாறு என்னுடைய மனக்குரங்கு குதித்த குதிப்பெல்லாம் அடக்கி என்னை ஆண்டுகொண்ட தலைவனே! என் உள்ளத்தின்கண் தூய நடம் புரிகின்ற சித்த சிகாமணியே வணக்கம். எ.று.

     படித்தல் - நூல்களை எடுத்துத் தானே படித்தல். கேள்வி - பிறர்பால் கேட்டறியும் ஞானம். ஐம்பொறிகளையும் அடக்கிய திறத்தை, “பார்த்திடலும் அடக்கி உறும் பரிசமெலாம் அடக்கித் தடிப்புறும் ஊண் சுவை அடக்கிக் கந்தமெலாம் அடக்கி” என்று மொழிகின்றார். சழக்கு - பிணக்கு. மடிப்பு - சோம்பல். வனக்குரங்கு - காட்டில் வாழும் குரங்குகள். குறிப்பு எனற்பாலது துடிப்பு என வந்தது.

     (8)