4765. பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
உரை: ஒருவர்க்கும் பணியாமலும் நான் ஒருவர்க்கும் பணிந்தறியேன்; அன்பு தோன்றப் பாடுதலுமில்லை; பத்தி நூல்களைப் படிப்பதுமில்லை; பிறர் படிக்கக் கேட்டதுமில்லை; பத்தியுடன் பூக்களை எடுத்துப் பூமாலை தொடுத்து உன் திருவுருவிற்கு அணிந்ததுமில்லை; மனமிளகிக் கண்களில் நீர் சொரிய அழுததுமில்லை; தொழுததுமில்லை; என்னுடைய அகங்காரம் சிறிதளவும் குறைந்ததில்லை; பிற உயிர்கள்பால் இரக்கம் கொண்டதுமில்லை; மெய்ம்மை மொழி பேசியதுமில்லை; உழுந்தடிக்கும் மரத்தடி போல் இருந்தொழிந்தேன்; இவ்வாறு இருந்த எனக்கு அருள் செய்யத் துணிந்து கருணை புரிந்தருளிய பெருமானே; என் உள்ளத்தில் ஞான நடம் புரிகின்ற சித்த சிகாமணியே வணக்கம். எ.று.
நான் படிக்காதொழியினும் பிறர் படிக்கக் கேட்பதில்லை என்பாராய், “படித்தறியேன் கேட்டறியேன்” என்று பகர்கின்றார். பக்தியோடு பூமாலை தொடுத்து அணிந்ததில்லை என்றற்கு, “பக்தியில் பூமாலை அணிந்தறியேன்” என்று கூறுகின்றார். அகங்காரம் - அகந்தை. தீப்போல் வெம்மை செய்வதாதலால், “அகங்காரம் சிறிதும் தணித்தறியேன்” என்று சாற்றுகின்றார். தயவு - இரக்கம். சத்திய வாசகம் - மெய் பேசுதல். உழுந்தின் காய்களை வெயிலில் உலர வைத்து நன்கு உதிருமாறு அடிக்கும் மரத்தடியை, “உழுந்தடித்த தடி” என்று உரைக்கின்றார். உழுந்து - உழுந்தம் பயிறு; இது உளுந்து எனவும் வழங்கும். (9)
|