4766. தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
உரை: பசி எடுத்தால் பொறுக்காமல் பெருகச் செய்து புறக்கடையில் திரியும் நாய் போலச் சீறிப் பொறுத்தாற்றும் தவநெறியைக் கைவிட்டு வீண்செயலை மேற்கொண்டு தனித்துண்டும் உண்ட வயிறு பெருக்காதேல் எழுந்திருக்க மாட்டேன்; பெரிதுண்பதால் வீங்கி வெடிப்பது போலப் பெருகுமாயின் எழுந்துபோய் வெறும் மரத்தடி போல் தரையில் படுத்து நெடிது தூங்கும் வழக்கமுடைய என்னை வலியப் போந்து ஆட்கொண்டு மறத்தலின்றி எந்நாளும் விழித்திருக்க வைத்த சிவபெருமானே! என் உள்ளத்தில் ஞான நடம் புரிகின்ற சித்த சிகாமணியே வணக்கம். எ.று.
தாங்குதல் - பொறுத்தல். நடை நாய் - வீட்டின் புறத்தே தெருவில் திரியும் நாய். உலம்புதல் - சீறிக் குரைத்தல். துன்பம் பொறுத்தலும் பிறர்க்கு அதைச் செய்யாமையும் தவமாகலின், “தவம் விடுத்து” என்று கூறுகின்றார். அவம் - தவத்துக்கு மாறான செயல். தனித்துண்டல் நன்றன்றாதலால், “தனித்துண்டும்” என்று நவில்கின்றார். வீங்குதல் - பெருகுதல். விம்முதல் - பெருத்தல். வெறுந் தடி போல் என்பதனால் உடை விலகி விழுந்து கிடப்பது பெறப்படும். வாங்குதல் - சுருங்குதல். கால அளவின்றி நெடிது உறங்குதலை, “வாங்காது தூங்கியதோர் வழக்கம்” என்று கூறுகின்றார். தூங்காது விழித்தலாவது எப்போதும் சிந்தித்த வண்ணமிருத்தல். இதனைக் கண்மூடி மௌனியாய்த் தூங்காமல் தூங்குதல் என்பர். (10)
|