97. திருவருட் பேறு
அஃதாவது, திருவருளைப் பெறுதலைக் கூறுவதாம்.
நேரிசை வெண்பா 4767. சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப்
பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க
வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தனையே
எந்தாய்நின் உள்ளமறி யேன்.
உரை: எந்தையே! சிறப்பு விளங்குகின்ற தூய திருமேனி கொண்டு நிலத்திலே நான் படுத்திருந்த படுக்கையில் ஒழுக்கம் விளங்க என்பால் வந்து என்னைத் தூக்கியெடுத்து வேறோர் இடத்தில் என்னை வைத்தாய்; அதற்கு உன் திருவுள்ளக் குறிப்பை அறிகிலேன். எ.று.
தூய திருமேனிக்குச் சிறப்புடைய இயல்பாதலின், “சீர் விளங்கு சுத்தத் திருமேனி” என்று சிறப்பிக்கின்றார். பாயல் - படுக்கை. தார் - ஒழுக்கம். தரையில் ஆடையை விரித்துப் படுத்திருந்த குறிப்பை முன்னமே தெரிவித்திருக்கின்றாராதலால் (4762) இங்கே, “பார் விளங்க நான் படுத்த பாயல்” என்று கூறுகின்றார். தரையில் கிடந்துறங்கிய தம்மையெடுத்து வேறோர் இடத்தில் வைத்ததற்குக் காரணம் புலப்படாமல், “நின் உள்ளம் அறியேன்” என்று இயம்புகின்றார். (1)
|