4768.

          பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால்
          நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே
          தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான்
          பாக்கியவான் ஆனேன் பதிந்து.

உரை:

     நான் ஓரிடத்தே அச்சத்தோடு ஒடுங்கிப் படுத்திருந்தேனாக என்னை அன்புடன் அணுகி இன்ப நகை புரிந்து சிறந்த வன்மை யுடைமையால் என்னைத் தூக்கி யெடுத்து மேலிடத்திலே என்னைக் கிடத்தினாயாதலால் நான் உன்னிடத்தே பதித்து நற்பேறு பெற்றவனானேன். எ.று.

     நயம் - அன்பு. வயம் - வலிமை. நகைத்தது அச்சத்தைப் போக்கி ஊக்குவித்தலாகலின், “நகைத்து” எனவும், போதிய வலி இல்லாதவிடத்து தன்னைத் தூக்க முடியாது என்பது புலப்பட, “வயத்தாலே தூக்கி” எனவும், கீழிடத்தே படுத்திருந்த தம்மை மேலிடத்தே கிடக்க வைத்தாய் என்றற்கு, “மேல் சூழலிலே வைத்தனை” எனவும் இயம்புகின்றார். அதனால் தமக்கு அவர்பால் அன்பு மீதூர்ந்ததை விளம்புதற்கு, “நான் பதிந்து பாக்கியவான் ஆனேன்” என்று கூறுகின்றார். பாக்கியவான் - நற்பேறு பெற்றவன்.

     (2)