4769. என்னேநின் தண்ணருளை என்னென்பேன் இவ்வுலகில்
முன்னே தவந்தான் முயன்றேனோ - கொன்னே
படுத்தயர்ந்தேன் நான்படுத்த பாய்அருகுற் றென்னை
எடுத்தொருமேல் ஏற்றிவைத்தா யே.
உரை: அச்சத்தோடு கீழே படுத்திருந்த பாயின் அருகில் வந்து என்னை எடுத்து மேலான இடத்தில் கிடத்தி அருளினாய்; அதனால் உன்னுடைய திருவருள் தான் என்னே! இத் திருவருட் பெருமையை நான் என்னென்று சொல்லுவேன்; முற்பிறப்பில் நான் என்ன தவம் செய்தேனோ அறிகிலேன். எ.று.
திருவருளின் நலத்தை வியந்து “என்னே” என்றும், அதன் மிகுதியை உணர்ந்து “என்னென்பேன்” என்றும், இவ்வுலகில் முற்பிறப்பில் தவம் செய்தவர்க் கன்றித் தவம் கைகூடா தென்பது பற்றி, “இவ்வுலகில் முன்னே தவந்தான் முயன்றேனோ” என்றும் கூறுகின்றார். கொன்னை - சொல்; அச்சம் என்னும் பொருள் குறித்து நின்றது. மேலிடம் மேல் என வந்தது. (3)
|