4770.

          சிந்தா குலத்தொடுநான் தெய்வமே என்றுநினைந்
          தந்தோ படுத்துள் அயர்வுற்றேன் - எந்தாய்
          எடுத்தாள் எனநினையா தேகிடந்தேன் என்னை
          எடுத்தாய் தயவைவிய வேன்.

உரை:

     எந்தையே! நான் மனவருத்தத்தோடு தெய்வமே என்று உன்னை நினைந்துகொண்டு தலையின் மேல் படுத்துச் சோர்வுடன் எந்தையே உனது அருளால் என்னை எடுத்து ஆள்வாயாக என்று உன்னை நினையாமல் கிடந்தேனாக, என்னை எடுத்து மேலிடத்தில் வைத்துக் காதலித்தாய்; உன் தயவை நான் என்னென்று பாராட்டுவேன். எ.று.

     சிந்தா குலம் - மனவருத்தம். உள்ளம் சோர்ந்து படுத்திருந்தேன் என்பாராய், “உள் அயர்வுற்றேன்” என்று உரைக்கின்றார். கிடக்கின்ற என்னை எடுத்தாள்க என்று நான் நினையாதிருக்கவும் நீயே வலிய வந்து என்னை மேலிடத்தே வைத்து ஆண்டருளினாய் என்று போற்றுகின்றாராதலின், “எந்தாய் எடுத்தாள் என நினையாது கிடந்தேன் என்னை எடுத்தாய்” என இசைக்கின்றார். தயவு - திருவருள்.

     (4)