4771. உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற
தென்னுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துன்னிநின்று
தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல்
ஆக்கமுற வைத்தாய் அது.
உரை: எந்தையே! என்பால் நெருங்கி என்னுடைய தூக்கத்தைப் போக்கி என்னையும் தூக்கியெடுத்து அன்புடன் மேலிடத்து இன்பமுற என்னைக் கிடத்தி வைத்தாய்; அதற்கு ஏதுவாகியவர்களுடைய திருவருளை நினைக்குந்தோறும் நெஞ்சம் உருகுகின்றது; இவ்வருட் செயலை என்னவென்று சொல்லுவேன். எ.று.
உன்னுதல் - நினைத்தல். வியப்பு மிகுதியால் “என்னுரைப்பேன் என்னுரைப்பேன்” என்று அடுக்குகின்றார். துன்னுதல் - நெருங்குதல். ஆக்கம் - ஈண்டு இன்பப் பொருளில் வந்தது. (5)
|