4772.

          நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி
          ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த
          மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின்
          காலிடத்தே வாழ்கின்றேன் காண்.

உரை:

     நான் படுத்திருந்த பாயருகில் வந்து என்னைத் தூக்கி ஊனாலாகிய என் உடம்பை ஒளி திகழுமாறு தான் குறித்த மேலிடத்தில் என்னை வைத்தருளினாய்; நானும் உலகியல் வெம்மையெல்லாம் நீங்கி உன்னுடைய திருவடியின் கீழ் வாழ்கின்றேன். எ.று.

     ஒளி இல்லாத என் உடம்பிலே திவ்விய ஒளி விளங்கும்படிச் செய்தாய் என்றற்கு, “ஊன் படுத்த தேகம் ஒளி விளங்க வைத்தனை” என்று உரைக்கின்றார். பதித்த மேலிடம் - குறித்த உயர்ந்த இடம். வெம்மை - உலகியல் வாழ்வில் உண்டாகி வெதுப்புகின்ற துன்பங்களின் வெம்மை. தீர்த்தல் - நீங்குதல். கால் - திருவடி

     (6)